Thursday, June 7, 2018

அரூபமானவை பூனையின் கண்கள்



எப்போதும் ஈரலிப்பாகவே மின்னும்
ஒளிப்பச்சை விழிகளினூடு வழியும்
அப்பாவித்தனமும் திருட்டுக் குணமும் ஒருசேர

ஆதி கால வனத்தை நினைவுபடுத்தும்
மேனி வரிகளோடு
அச்சுறுத்தும் சிலவேளை அதன்
அசட்டுச் சிப்பிக் கண்கள்

இரைக்காகக் காத்திருக்கும்வேளையில்
அக் கண்களினூடு ததும்பும்
சலனமற்ற ஒற்றைச் சாதுவின் தியானம்

வேட்டை விலங்கின்
உடல் மொழியைப் பேசும்
பின்னங்கால்களில் அமர்ந்து
மீதிப் பாதங்களை ஊன்றி
நிமிர்ந்து பார்க்கையில்

ஏதேனும் யாசித்துப் பின் தொடரும்
அதன் பார்வையில்
தயை கூறக் கோரும்
கெஞ்சல் மிகைத்திருக்கும்

அபூர்வமானவை
பூனைப் பார்வைகளற்ற
குடியிருப்புக்கள்

அரூபமான கண்களைக் கொண்ட
பூனைகள்
பூனைகள் மாத்திரமேயல்ல

- எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி - காலச்சுவடு ஏப்ரல் 2018, வல்லமை, வார்ப்பு, பதிவுகள், தமிழ் எழுத்தாளர்கள் இணையத்தளம் 


Monday, January 15, 2018

ஆகாயக் கடல்


எத் திசையிலும் எப்போதும்
சுழன்றடிக்கலாம் காற்று
அதன் பிடியில்
தன் வேட்கைகளையிழந்த
ஓருருவற்ற வானம்
மேகங்களையசைத்து அசைத்து
மாறிக் கொண்டேயிருக்கிறது


விதவிதமாக வர்ணங்களைக் காட்சிப்படுத்தும்
தொடுவானத்தினெதிரே
ஒற்றை நிறம் நிரப்பிப் பரந்து கிடக்கிறது கடல்
ஆகாயத்தைப் போலவன்றி
சமுத்திரத்தின் இருப்பு
ஒருபோதும் மாறுவதில்லை
எவ்வித மாற்றமுமற்ற
கடலின் அலைப் பயணம்
கரை நோக்கி மாத்திரமே


பருவ காலங்களில்
வானின் நீர்ச் செழிப்பில்
கடல் பூரித்து
அலையின் வெண்நுரையை
கரை முத்தமிடச் செய்கிறது


இராக் காலங்களில்
தூமகேதுக்களின் வழிகாட்டலின்றி
கடற்பயணங்களில்லையென்றபோதும்
ஒன்றுக்கொன்று நேரெதிர்
ஆகாயமும் கடலும்


நேரெதிராயினும்
இப் புவியில்
ஆகாயமின்றிக் கடலேது


கரை
கால் நனைக்கக் கால் நனைக்கக் கடல்

- எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி - அம்ருதா ஜனவரி 2018 இதழ், வல்லமை இதழ், வார்ப்பு இதழ், பதிவுகள் இதழ், தமிழ் எழுத்தாளர்கள் இதழ்.