Tuesday, October 16, 2007

ஒரு வண்ணத்துப் பூச்சியின் பாடல்














ஒரு அழகிய தேசத்துக்
குருதி வண்ணக்
கதவு திறந்து - பெரும் சோகத்துடன்
கொட்டும் மழைதனிலே
இத் தேசத்தின்
இறுதி மனிதனாக நீ
கதிகலங்கப் போவதைப்
பார்த்திருந்தேன் !

இது
பசும் மலைகள் போர்த்திய
வனாந்தரமல்ல
முன்னொரு காலத்தில்
குடிமக்கள் கூடிக்
குதூகலித்ததோர் அழகிய தேசம் !

எவ்வாறெனினுமின்றிங்கு
புலியின் வேட்டைக்கும்,
சிங்கத்தினுறுமலுக்கும் - நரிகளின்
ஊளைகளுக்கும் தடையேதுமில்லை ;
கட்டுப்பாடு, தடைகளெல்லாம்
மனிதத்தோடு வாழும்
மனிதர்களுக்கே...!

என்ன தேசமிது
சீரழிந்து போய்...!
என்னழகில் மயங்கிச்
செட்டை பிடிக்கத் துரத்தியலையும்
சிறார் எவருமில்லாமல்
என்ன வாழ்க்கையிது
சீரழிந்து போய்...!

எனக்கே கேட்காமல்
சத்தமின்றி
மெல்லப் பாடுகின்றேன்
எனதான பாடலை !

காற்று - என் பாடலை
அதன் காதுகளுக்கு
மெல்லக் கொண்டு போகுமெனின்,
நாளையென்
செட்டைக்கண்களில்
குத்தப்பட்டு,
என்னுடலும் உலரக்கூடும்
இம் முட்கம்பிகளில் !


-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

2 comments:

இறக்குவானை நிர்ஷன் said...

நம் தேசத்தில் பிறந்த ஒருவரின் கவிதை இணையத்தில் உலாவருவதைக் கண்டு களிப்படைகிறேன்.தொடர்ந்து எழுதுங்கள். கவிதைக்கு களம் அமைத்துக்கொடுப்பார் யாருமில்லாதபோது புதிய தளத்தில் கவிதைகள் மெருகேறட்டும். வாழ்த்துக்கள்.

M.Rishan Shareef said...

மிக நன்றி நிர்ஷன்...!