Monday, January 15, 2018

ஆகாயக் கடல்


எத் திசையிலும் எப்போதும்
சுழன்றடிக்கலாம் காற்று
அதன் பிடியில்
தன் வேட்கைகளையிழந்த
ஓருருவற்ற வானம்
மேகங்களையசைத்து அசைத்து
மாறிக் கொண்டேயிருக்கிறது


விதவிதமாக வர்ணங்களைக் காட்சிப்படுத்தும்
தொடுவானத்தினெதிரே
ஒற்றை நிறம் நிரப்பிப் பரந்து கிடக்கிறது கடல்
ஆகாயத்தைப் போலவன்றி
சமுத்திரத்தின் இருப்பு
ஒருபோதும் மாறுவதில்லை
எவ்வித மாற்றமுமற்ற
கடலின் அலைப் பயணம்
கரை நோக்கி மாத்திரமே


பருவ காலங்களில்
வானின் நீர்ச் செழிப்பில்
கடல் பூரித்து
அலையின் வெண்நுரையை
கரை முத்தமிடச் செய்கிறது


இராக் காலங்களில்
தூமகேதுக்களின் வழிகாட்டலின்றி
கடற்பயணங்களில்லையென்றபோதும்
ஒன்றுக்கொன்று நேரெதிர்
ஆகாயமும் கடலும்


நேரெதிராயினும்
இப் புவியில்
ஆகாயமின்றிக் கடலேது


கரை
கால் நனைக்கக் கால் நனைக்கக் கடல்

- எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி - அம்ருதா ஜனவரி 2018 இதழ், வல்லமை இதழ், வார்ப்பு இதழ், பதிவுகள் இதழ், தமிழ் எழுத்தாளர்கள் இதழ்.

Wednesday, September 13, 2017

மழைப் பயணி
ஆங்காங்கே தேங்கியிருக்கும் சகதிகளோடு
மழை நனைத்த ஒற்றையடிப் பாதை
ஈரமாகவே இருக்கிறது இன்னும்

ஊதா நிறப் பூக்களைக் கொண்ட
தெருவோர மரங்கள்
கிளைகளிலிருந்து காற்று உதிர்க்கும் துளிகளினூடு
நீரில் தலைகீழாக மிதக்கின்றன

இருண்ட மேக இடைவெளிகளிலிருந்து வந்து
தரையிலிறங்கியதும்
சந்திக்க நேரும் மனிதர்களுக்கேற்ப
மழையின் பெயர் மாறிவிடுகிறது
ஆலங்கட்டி, தண்ணீர், ஈரம், சேறு, சகதியென

மழைக்குப் பயந்தவர்கள்
அடைத்து மூடிய ரயில் யன்னல் வழியே
இறுதியாகக் காண நேர்ந்த
பச்சை வயல்வெளியினூடு
மழையில் சைக்கிள் மிதித்த பயணி
இந் நேரம் தனது இலக்கை அடைந்திருக்கக் கூடும்


- எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com
நன்றி - அம்ருதா இதழ், வல்லமை, பதிவுகள், தமிழ் எழுத்தாளர்கள் இணையத்தளம், வார்ப்பு

Wednesday, August 9, 2017

கோடைக்கு இரை ஈரம் - எம்.ரிஷான் ஷெரீப்யானை எலும்புகளில் அமரும் மீன்கொத்திகளும்
புறக்கணித்துவிட்ட
இலையுதிர்த்த விருட்சங்களில்
பௌர்ணமி நிலவு
கோடையை வாசித்தபடி வானில் நகரும்


வனத்தில்
புள்ளி மான்கள் நீரருந்திய
குட்டைகள் வரண்டு விட்டன


அகோரச் சூரியன் தினமும்
தனதாயிரம் உஷ்ணக் கரங்களால் தடவும்
பசிய புற்கள் படர்ந்திருந்த நிலம்
தன் மென்பரப்பையிழந்து
வெடிக்கத் தொடங்கி விட்டது


சாம்பல் குருவிகள் ஏழு
இரை தேடும் தம் ஒற்றைத் திட்டத்தோடு
தினந்தோறும் காலையில்
முற்றத்திலிறங்கும்
காட்டு மலைச் சரிவின் பலகை வீடுகள்
உஷ்ணப் பிராந்தியக் கதைகளைச் சுமந்த
காற்றோடு வரும் பூ இலைச் சருகுகளைப் போர்த்தி
தம்மை மரமென அலங்கரித்துக் கொள்கின்றன


எஞ்சியிருக்கும் ஓரோர் பட்சிகளும்
தமக்கொரு மரப் பொந்து வேண்டுமென
கேட்டுக் கொள்ளும் பார்வைகளை
சேமித்து வைத்தவாறு
வட்டமிட்டபடியே இருக்கின்றன
கருநிறப் பின்னணியில் வெண்ணிற வளையமிட்ட
மரங்கொத்திப் பறவையின் கண்கள்


கொக்குகளும் நாரைகளும்
தம் ஒற்றைக் கால் தவத்தோடு மறந்து கைவிட்ட
தண்ணீர்க் குளங்களின்
ஈர மணற்தரையைத் தொடுகின்றன
ஆழமற்ற நீரில் பிரதிபலிக்கும்
தாகித்த மேக விம்பங்கள்


அவ்வாறாக
கோடைக்கு இரை
ஈரமென ஆயிற்று

- எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி - அம்ருதா இதழ், வல்லமை, பதிவுகள், தமிழ் எழுத்தாளர்கள் இணையத்தளம், வார்ப்பு